×

சிவபுரத்தில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் டெங்கு பீதியில் பள்ளி குழந்தைகள்

ஈரோடு, நவ.1: ஈரோடு வில்லரசம்பட்டி சிவபுரம் மாநகராட்சி பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கொசு  உற்பத்தி அதிகரித்து டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட பகுதி வில்லரசம்பட்டி சிவபுரம். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில், போதிய சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதுதவிர, இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்ல வழியின்றி இங்குள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது மழை பெய்து வரும் நிலையில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகி டெங்கு காய்ச்சல் பரவும் அபாயநிலை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கலெக்டர் கதிரவன் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந் நிலையில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகிலேயே கழிவுநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இந்த பள்ளி ஓரம் புதர்மண்டி காட்சி அளிப்பதால் பாம்புகள் பள்ளிக்கு படையெடுக்கும் நிலையும் உள்ளது.
இப் பகுதியில், சாக்கடை கால்வாய் அமைக்கவும், கழிவுநீர் சேராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:வில்லரசம்பட்டி சிவபுரம் பகுதியில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால், சாலையின் இருபுறமும் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அருகே தேங்கி கிடக்கிறது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 46 குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இப்பகுதியில் சிலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். பள்ளி அருகிலேயே கழிவுநீர் தேங்கி கிடப்பதால் டெங்கு காய்ச்சல் பரவும் என பயந்து தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து 3வது மண்டல சுகாதார அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.டெங்கு கொசுப்புழுவை ஒழிக்க கலெக்டர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வரும் நிலையில் பள்ளி அருகிலேயே தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிவபுரம் பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags : School children ,sewage dengue panic ,Sivapuram ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில்...